#நான்_தனிமை_பேனா
என் வாழ்கையின் முதல் காதல் கடிதம்.
அன்புள்ள பேனாவுக்கு,
காதலன் எழுதி கொள்(ல்)வது .....
எழுத்துகளுக்கு சக்தி இல்லை என்றாலும் அதில் உணர்ச்சிகள் உச்சி முகரப்படும் பொழுது அவை என்றுமே மனதில் ஆழமாய் பதிகின்றது . அப்படிப்பட்ட ஒரு உறவு... ஒரு காதல் .... ஒரு நட்பு ... ஒரு கோபம் ... ஒரு சண்டை... என என் தனிமையின் இனிமையை .....இயலாமையை ...கண்ணீரை ...ஊடுருவி உரு பெறச்செய்யும் ஒரு உறவு தான் எனக்கும் உனக்கும்.
ஒவ்வொரு முறையும் நான் சிந்தித்து உன்னை வெற்று வெள்ளை காகிதத்தில் முத்தமிட செய்யும் பொழுதெல்லாம் வார்த்தைகள் என் எண்ணங்களை முந்தி கொண்டு ஓட ஆரம்பிக்கும். நான் நிறுத்தும் பொழுது தொடங்கும் ....நான் தொடங்கும் பொழுது தடுக்கி நிற்கும் . என் எண்ணங்களுக்கும் உனக்கும் ஆன தொடர்பு ஒரு அமானுஷ்யம். இன்றளவும் அதை கண்டு பிடிக்க முடியாமல் ஓடி கொண்டிருக்கிறேன்.
என் எண்ணங்களுக்கு எப்படி நீயோ எனக்கும் அப்படி தான் தனிமையும். அதில் காதலும் இருக்கும்... காமமும் இருக்கும்.... இயற்கையும் இருக்கும்... செயற்கையும் இருக்கும்.....அமைதியும் இருக்கும்..... வன்மமும் இருக்கும். அத்தகைய நிலையை மோசமில்லாத முக்தி நிலையாய் அங்கே நானும் என் எழுத்துக்களும் அதன் வசம் பட்டிருக்கும்.
ஒவ்வொரு முறையும் என் கற்பனை குதிரையின் சவாரியின் பொழுதெல்லாம் அதன் கடிவாளமாய் தனிமை என்னை ஈர்த்தும் இழுத்தும் செல்கின்றது. ஒரு புதிய பரிமாணம்... ஒரு புதிய உலகம் என அதன்விந்தையை....விதையை...என்னு ள்...உன்னுள்...உட்செலுத்துகி றது.
சுண்ணாம்பு கட்டிகளிடமும் , எழுதுகோலிடமும் இருந்து வந்த ஈர்ப்பு , முதல் முறையாய் உன்னிடம் கண்டதும் காதலில் விழச்செய்து, என் வாழ்க்கையையும் வார்த்தைகளையும் அழகாக்கி கொண்டிருக்கிறது.
என் காதலியே ...
என்ன வேண்டும் நமக்கு... மாலை நேர பொழுதுகளும், சின்னதாய் நாம் கசக்கும் காகிதங்களும் . மின்னல் மேகத்திடம் பயந்து, காகிதத்தின் ஓரம் தஞ்சமடைந்து கததப்பாய் கட்டிக்கொண்டிருக்கும் நொடிகளை சிலாகித்து சொல்வாயே , அந்த பெண்மையின் நாணத்தை எண்ணி சிலிர்த்து கொண்டிருக்கிறேன் !!
என் தோழியே ....
தனிமையில் நான் கிறுக்கிய கவிதைகளை கண்டு நகைப்பாய் . அதே சமயம் நான் வார்த்தைகளின் இடையே இடைவெளி விட்டாலும் ,கோபித்து கொண்டு அவைகளை ஒன்று சேர்த்து உன் மைக்கரையை பதிப்பாய். என் நித்திரை கொல்லும் இரவுகள் எல்லாம் உன்னுடன் பேசிக்களித்த ஞாபகங்களாய் விரிகிறது . என் சோகத்தின் பொழுதுகள் எல்லாம், நீ என் மார்போடு உறங்கும் போது தொலைந்து விடுகிறது சகியே.
என் மனைவியே ...
என் கட்டை விரல் உன் கழுத்தோரம் தீண்டி சொன்ன ரகசியங்களை காதலோடும் ,சில சமயம் ஊடலோடும் காகிதத்தில் கதைத்த போது அங்கே சில நிமிடங்கள் காகிதமும் வெட்கப்பட்டு காற்றில் பறந்து சென்ற நினைவுகளை மறந்து விட்டாயா ?. ஒவ்வொரு முறையும் என் கற்பனைகளை உன் உடலில் சுமந்துகொண்டு உதிரமாய் உன் மையை உதிர்த்து பிரசவிக்கும் வார்த்தைகள் சிரிக்கும் பொழுது என்னை தந்தையாக மகிழ்ச்சி கடலில் ஆழ்த்துகிறாயே !
தாயாக...
உன் போல பெண் பிள்ளைகள் வேண்டுமென்று மெய்யெழுத்துகளுக்கு அழகாய் பொட்டிட்டு மைத்தீட்டி அன்பாய் கொஞ்சும் நிமிடத்திலும் மற்ற எழுத்துக்கள் பிழை செய்தாலும் மெலிதாய் அடித்து அவர்களின் குறும்புதனத்திற்கு’ முற்று புள்ளி வைக்கும் பொழுது மேலும் அழகாக தெரிகிறாய் என் உயிரே. தொலைத்தூர பயணத்திற்காக தயாராகி கொண்டிருக்கிறேன் , நீ என்னை விட்டு விலகமாட்டாய் என்ற நம்பிக்கையில் .என்னவளே அடி என் அவளே.... பெண்னவளே என் பெ(ன்)ண் இவளே !!
#காதலுடன்_கார்த்திகேயன்
Comments
Post a Comment