“ ஒருநாள் “
அந்த காகிதங்களுக்கு கண் இருந்தால் கண்ணீர் வடித்து என் அறையை கடலாகி இருக்கும் . வாய் இருந்தால் அச்சில் வாராத வார்த்தைகளால் என்னை அர்ச்சனை செய்து காரி துப்பி இருக்கும் . கணக்கில்லாமல் கைகள் சிறுகதை, ஆர்டிகல் என்ற பெயரில் கிறுக்கி தள்ள , குப்பைகளாய் காகிதகங்கள் என்னை கொலை முடியாத காரணத்தினால் அமைதி காத்தது. நானும் முயன்று கொண்டிருக்கிறேன் நல்ல ஆர்டிகல் எழுத , ஆனால் என் பத்திரிக்கை எடிட்டர் ஹரிஷ் என் கதைகளை படித்துவிட்டு , காகிதங்களை ஓவர் டேக் செய்து திட்டுகிறார்.
இதை எல்லாம் பொறுத்துக்கொள்ள முடியாமல் ஒரு ஒருவாரம் எங்கேயாவது விடுப்பு எடுத்து என் இடுப்பை இலகுவாக பஞ்சில் அமர்த்தி மெல்ல தலையசைத்து பிடித்த பாட்டை ரசிக்க ஒரு இடத்தை தேடுகின்றேன் . ஆபிசிலும் அதை தான் செய்கிறேன் என்றாலும் அதில் எனக்கென்று ஒரு நேர்மை இருக்கிறது . ஒரு கண்ணை எனக்கு ஒதுக்கி தூங்க வைத்து விட்டு மறு கண்ணை எடிட்டர் வந்தால் காட்டி கொடுக்கும் கேமிராவாய் பயன்படுத்திக்கொண்டிருக்கிறேன்.
“ கரு வேண்டுமாம் ...” என்ன பெரிய கரு ??... என்று நினைத்துக்கொண்டிருந்த வேளையில் போன் மணி அழைத்தது . எடிட்டராக தான் இருக்கும் என கணித்து போனை எடுக்காமல் அவரை நன்றாக திட்டினேன். ரிங் வந்துக்கொண்டே இருந்ததால் பிழைத்து போகட்டும் என போனை எடுத்துப் பார்த்தால் அது என் அத்தை. அத்தைக்கு தீடீரென என்ன என் மேல் பாசம் என ஏழாம் அறிவு மணி அடித்தது . போனை அட்டன்ட் செய்து ஒரு ஒரு மணிநேரம் கழித்து அணைத்தேன்.
என் எடிட்டரே பராவால்லை. சிறுவயதில் அத்தைக்கு நான் விமலா அத்தைக்கு சூட்டிய ரம்பம் மாமி என்னும் பெயருக்கு இன்று வரை உறுதி சான்றிதழ் வழங்கிக்கொண்டிருக்கிறார். “வந்து வீட்டில் தங்கி விட்டு போடா “ என்பதை மாமாவின் ரீச்சார்ஜ் பணத்தை மொத்தம் அழித்து ஒரு மணி நேரம் பிரசங்கம் செய்தார் . நானும் விடாமல் அவர் பேச்சுக்கு பேச்சு கொடுத்து எங்கள் வார்த்தை பரிமாற்றங்களை அதிகப்படுத்திக்கொண்டிருந்தேன். அப்போ தானே காசு எல்லாம் காலியாகி மாமாவிடம் நன்றாக மாட்டி கொள்வாள்.
நான் சகுனியின் சின்னத்தம்பி என அவள் அறிந்திருக்கவில்லை போலும் . என் மைன்ட் வாய்ஸ்க்கு எப்போதும் நல்ல சென்ஸ் ஆப் ஹ்யூமர் உண்டு. சின்ன வயதில் என் கன்னத்தை அத்தை மட்டும் கிள்ளாமல் அந்த தெருவில் உள்ள எல்லாரையும் அழைத்து கிள்ள சொல்லி விளையாடினாய் அல்லவா. இப்போது நீயே என்னை அழைக்கிறாய். வருகிறேன் என் செல்ல அத்தையே, புது வித திட்டங்களோடு என மனம் எண்ணையில் போட்ட கடுகாய் பொரிய எடிட்டரிடம் போன் அழைத்தது .
“ ஹெலோ ... என்ன கார்த்திக் இந்த வாரம் ஆர்டிகல் ரெடி பண்ணிடிங்களா ?? “
“ எங்கடா பண்ண விட்ட , அதான் பத்து நிமிஷத்துக்கு ஒரு தடவை போன் செய்கிறாயே “ என என் மனம் கத்தினாலும் அவர் காதில் விழுகாது என்ற தைரியத்துடன் “முடிக்கிற ஸ்டேஜ்ல இருக்கு சார் ..” என்றேன் .
“ குட் ...”
“ அந்த ஆக்டர் விருச்சக்காகந்த் கிட்ட அப்பிடியே இன்னிக்கு பேட்டி எடுத்துட்டு வந்துடு. “
“ சார் அவரு கிட்ட எப்படி .... ?? “ என நான் முடிக்கும் முன்னரே அவர் போன் கட் செய்துவிட்டு அதை விட முக்கியமாக இந்நேரம் தன் வீடு பூஜை அறையில் மணி அடிக்க கிளம்பி இருப்பார் என என் மனம் குமறியது .
விருச்சககாந்தை நாம் எப்படித் பேட்டி எடுப்பது ?? அவர் நமக்காக நேரத்தை ஒதுக்கி தருவாரா? என ஒருவாறு என் மனம் குழம்பிய வேளையில் பசி என் வயிற்றில் புட்பால் விளையாட தொடங்கி இருந்தது . சீக்கிரமாக டிபன் சாப்பிட மாமி மெஸ்ஸுக்கு செல்ல எத்தனிக்கையில் கிராமத்தில் இருக்கும் அத்தையை காண வேண்டும் என்ற நினைவை துவைத்து வெளியில் காய போட்டிருந்தேன் .
ஹாங்கரில் இருந்த புத்தம் புதிய பீட்டர் இங்கிலாந்து என போலியாக பெயர் பொறிக்கப்பட்ட லோக்கல் சட்டைகள் என்னை பார்த்து வரவேற்ற கணம் மிகவும் சந்தோஷமான தருணம் . அவர்களின் அடைக்கலத்தில் தான் சில இடத்தில் எனக்கு மரியாதை . இருப்பதிலே காலர் அழுக்காகாத சட்டையை தேர்ந்தெடுத்து என்னோடு ஒரு நாள் லிவிங் டுகெதருக்காக வாழ்வளித்துவிட்டு என்றோ மாடியில் விழுந்த பக்கத்து வீட்டு சட்டையை விழுந்தபோது பொறுப்பாக அதை அவர்களிடமே கொடுத்த பொழுது, அந்த நல்லெண்ணத்தின் காரணமாய் எனக்கு பரிசாக ஒரு நல்ல பேன்டை அவர்களுக்கே தெரியாமல் எடுத்துக்கொண்டதை ஆல்டர் செய்து உடுத்தி கிளம்பினேன் .
மாமி மெஸ் . சொர்க்கத்தில் கூட சில நேரம் உணவு தன் சுவையை ஒரு நொடி இழந்திருக்கலாம். ஆனால் மாமியின் கைப்பக்குவமோ, டிவியில் காட்டும் மல்லிகா பத்ரினாத்தை சைடுக்கு தள்ளி விட்டு முன்னேறும் அளவிற்கு திறமை உடையவர் . எனக்கும் மாமிக்கான பந்தம் சங்கர் சிமண்டில் கட்டிய பாலம் போன்றது . தலைமுறைகளுக்கு தலைகாத்து நிற்கும். நான் திடீரென்று காணாமல் சென்றாலும் என்னை கண்டுபிடிக்க கிளம்பி விடுவார். காரணம், ஒரு வகை பாசமும் , நான் வாங்கிய கடனும் .
மாமியும் கணேஷ் மாமாவும் கடுகும் உளுத்தம் பருப்பும் போல . அப்படி ஒரு அன்னியோன்யம். அதானால் தான் என்னவோ இந்த இன்று வரை அந்த மெஸ் அமோகமாக ஓடிகொண்டிருகிறது .கூட்டம் அலை மோதினாலும், என்னிடம் சரியான சில்லறையை வாங்குவதில் குறியாய் இருப்பர் இருவரும் . இன்றும் வழக்கம் போல் என் திறமையை பயன்படுத்தி காலை உணவை முடித்துக்கொள்ளலாம் என திட்டம் தீட்டி கிளம்பினேன் .
இதோ என்னுடைய ஹீரோ ஹோண்டாவை எடுத்து கொண்டு பயணத்தை ஆரம்பித்தேன். மைலாப்பூரிலிருந்து ராயப்பேட்டை வரை என்னுடைய மயில் வாகனமான ஹீரோ ஹோண்டாவில் தான் செல்வேன் . ஹீரோ ஹோண்டா என்பது என் செகண்ட் ஹான்ட் சைக்கிளின் பெயர். மோட்டார் சைக்கிள் தான் இல்லை, சரி இருக்கும் சைக்கிள் பெயராவது அப்படி இருக்கட்டுமே என்பதே என் வண்டியின் நாமத்தின் காரணம் . வேலை மட்டும் நிரந்தரமானால் கண்டிப்பாக அன்றே புது ரக பைக் வாங்க வேண்டும் என்பதே அடியேனின் அபிலாஷை . ஆனால் என்ன செய்வது நான் போகும் இடமெல்லாம் ஆண்டவன் என்னை முந்தி சென்று போக்குவரத்து அதிகாரி போல என்னை டேக் டைவர்சன் என்கிறார்.
மாமி மெஸ்ஸை அடைந்த பொழுது வெயில் குளியல் போட்டு வியர்வை துளிகள் என் பீட்டர் இங்கிலாந்து சட்டை சுயரூபத்தை காட்ட ஆரம்பித்திருந்தது . சைக்கிளுக்கு ஒன்பது பூட்டு வெவ்வேறு ஆர்டர்களில் பூட்டி விட்டு சாவியை உள்பாக்கட்டில் சொருகி வைத்து நடந்தேன்.
உள்ளே நுழைந்த போது மாமி பெருக்கிகொண்டிருந்தார் . மெஸ்ஸில் யாரும் இல்லை . நான் தான் அன்றைய முதல் போனி போலிருக்கிறது. மாமா கல்லாபெட்டியின் அருகே இருந்த அவர்களின் தாத்தா படத்திற்கும் அருகில் அன்றைய தின காலை நெய்வேத்தியத்திர்க்காக என்னை போல படத்தில் பல தெய்வங்களுக்கும் ஊதுபத்தி காட்டிக்கொண்டிருந்தார்
.என்னை பார்த்ததும் மாமி துடைப்பத்தை அட்ஜஸ்ட் செய்து பெருக்கியத்தின் குறியீடு என் மூளைக்கு உணர்த்தி இடத்தை காலி செய்து விடு என மூன்றாம் எண் புயல் கூண்டு அறிவிப்பு ஒலித்தது . சரி மாமாவிடம் எதாவது தயவு தாட்சாயணம் கிடைக்குமா என்றால் அவர் ஒரு சிலேட்டில் எதோ எழுதி தொங்க விட்டிருந்தார் .
“கடன் அன்பை முறிக்கும் “
மனது சிரித்தது
இப்போது சிலேட்டை திருப்பினார்
அன்பு என்பது அடிக்கப்பட்டு எலும்பு என எழுதப்பட்டிருந்தது .
விஷயம் புரிந்தது .” என்ன மாமா ..மாமி எப்படி இருக்கேள்... சும்மா தான் நான் சாப்பிட வரவில்லை . உங்களை பார்த்து ரொம்ப நாள் ஆகுதில்லையா... அதான் ... இந்த பக்கமாய் வந்தேன் .. உங்களை பார்க்க .... சரி வரேன் மாமி...மாமா ... என உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியில் வந்தேன். வந்தவனுக்கு மேலும் அதிர்ச்சி !
எனது ஹீரோ ஹோண்டாவை காணவில்லை . அத்தனை சிறைப்பிடிப்புக்கும் மேல் எப்படி என்னுடைய மயில் வாகனத்தை களவாடியிருப்பார்கள் ?? பத்து தடவை பஞ்சர் போட்ட அந்த டையருக்கு வேகமாக செல்லும் சக்தி இல்லை . திருடியவர்கள் கண்டிப்பாக அரைக்கிலோமீட்டர் கூட தாண்டி இருக்க மாட்டார்கள் என என் போலிஸ் மூளை யோசிக்க ஆரம்பித்தாலும் .மனது குலுங்கி குலுங்கி சிரிக்கத்தொடங்கியது . இந்த சைக்கிளையும் ஒருவன் திருடி இருக்கிறான் என்றால் அவன் என்னை விட மோசமான நிலையில் தான் இருப்பான். சரி வாழ்கையில் எல்லாம் சென்று விட்டது . இது மட்டும் என்ன விதிவிலக்கா என்று நினைத்தப்படி காலார நடக்க ஆரம்பித்தேன் . வழக்கம் போல பிழைப்பை தேடி எல்லோரும் ஓடிக்கொண்டிருந்தனர். எனக்கும் இந்த ரிப்போர்டர் வேலை சலித்துவிட்டது. வேறு எதாவது செய்ய வேண்டும் என மனதில் ஓடிகொண்டிருந்தது. இந்த நடைபாதையின் முடிவில் அதற்க்கான விடை கிடைக்குமென நம்பி எண்ணங்களை ஓட விட்டு நடந்தேன் .
போன் மணி அடித்தது. வேறு யாரு என் காதலி போல அடிக்கடி போன் செய்து உயிரை வாங்கும் எடிட்டர் தான் .
“ சொல்லுங்க சார் “ என்றேன் எனக்கு வராத சிரிப்பை உதிர்த்து
“ விருச்சக்காகந்த் பீச் பக்கத்துல தான் ஷூட்டிங்ல இருக்கிறார் . நீங்க அங்கே போய் கொஞ்சம் பேட்டி எடுத்துட்டு வாங்க ... ஆனா வழக்கமான பேட்டியா இருக்க கூடாது ..கொஞ்சம் வித்தியாசமா எடுத்துட்டு வாங்க “
“ சரி டா ..” என்றேன் எரிச்சலாக
“என்ன கார்த்திக் ?? “
“ இல்ல சார் ... ஒகேனு சொன்னேன் ... இங்கே ஒரே வண்டிகளின் இரைச்சல் சத்தம், அதான். “
“ ம்ம்ம் .. சரி நான் மாலை உங்களுக்கு கால் பண்றேன் “
எடிட்டருக்கு சாதகமாய் பீச் செல்லும் பேருந்து வந்தது . அன்று என்னவோ கூட்டம் அதிகமாய் இருந்தது . மாசக்கடைசி என்பதால் என் பாக்கெட்டும் திவாலாகி இருந்தது. சரி என்ன செய்வது வேறு வழியில்லை என்றபடி ஏறி உள்ளே பதுங்கினேன்.
டிக்கெட் எடுக்காதவங்க.. எடுத்துடுங்க ... என்றபடி நடத்துனர் தன் வழக்கமான வசனத்தை உதிர்துக்கொண்டிருந்தார் . இதயத்தின் ஓசை அந்த இரைச்சல் சத்தத்திலும் என் காதில் ஒலித்தது. டிக்கெட் எடுக்க என்னிடம் பாஸ் செய்யப்பட்ட பணத்தை நடத்துனரிடம் கொடுத்து கொடுத்து என் சீட்டை போல பில்டப் செய்தேன். அவர் கண்டுபிடிக்கவில்லை . ராஜதந்திரங்கள் அனைத்தையும் கரைத்து குடித்தவன் நான் என்ற மமதை என் மூளையில் ஓடிக்கொண்டிருந்தது.
ஒருவழியாக மெரினாவை அடைந்து கூட்டமாக இருக்கும் இடத்தை தேடி கண்டுப்பிடித்தேன் . அங்கே தான் விருச்சக்காகந்த் படப்பிடிப்பு நடத்திக்கொண்டிருக்கிறார் . விருச்சக்காகந்த் ஒரு வளர்ந்து வரும் மிகப்பெரிய நடிகர், இயக்குனர்,பாடகர் என அவரே அவரை பற்றி பெருமையாய் பறைசாற்றுவார் என கேள்விப்பட்டிருக்கிறேன் . இருந்தாலும் இந்த எடிட்டர் தொல்லை தாங்க முடியாமல் அவரை பேட்டி காண அணுகிய போது எனக்கு சுக்கிரன் உச்சத்தில் இருந்தான் போலும். அவர்கள் ஷாட் ப்ரேக்கில் இருந்தனர்.
“ சார் வணக்கம் சார் ...என் பெயர் கார்த்திக் .நான் “ கண்ணாடி “ என்கிற பத்திரிக்கையிலிருந்து வருகிறேன் . உங்களை பேட்டி காண ஒரு பத்து நிமிடம் ஒதுக்க முடியுமா ? “ என்றேன் .அந்த ஒல்லிபிச்சான் உடம்பில் உள்ள சின்ன தலையில் டைரக்டருக்கே உரித்தான தொப்பி தொங்கிக்கொண்டிருந்தது . “ அப்கோர்ஸ் “ என தப்பான ஆங்கிலதில் சரி என்றார்.
“ சார் ... நீங்க ஏற்கனவே எடுத்த படம் சூப்பர் ஹிட் ,ஆனா அது ஒரு கொரியா படம் என்று பரவலாக பேசப்படுகிறதே ?? “
“ ம்ம்ம் .. என்னங்க பண்றது ..நம்ம நாட்ல இதுதான் பிரச்சனை. உலகத்தரமான சினிமாவை கொண்டுபோகும் என்னை மாதிரி இயக்குனர்களுக்கு அவர்கள் ஆறுதவு தர வேண்டும் . “அந்த படம் ஒரு வாரம் கூட ஓடவில்லை என்பதை கிழித்த நாளிதழ்களை அவர் படிக்கவில்லை போலும் என நினைத்துக்கொண்டேன்.
“ சார் இப்போ இயக்கம் படத்தை பற்றி சொல்லுங்க சார் ? “
இப்போ நான் இயக்கம் படம் “ இதெல்லாம் ஒரு படமா ? “ இந்த படத்தில் இது வரைக்கும் தமிழ் சினிமா பார்க்காத கதை இருக்கும் . ஒரு ஹீரோ ஒரு வில்லன் , இரண்டு நடிகைகள் என எல்லாமே புதுசா இருக்கும் என பல்லை இளித்தார் .
என்னது இது புதுசா ?? என என் மனது காரிதுப்பி உண்மையாகவே இதெல்லாம் ஒரு படமா என்று கேட்க தோன்றியது.
காதில் ரத்தம் வரும் வரை அவரிடம் பேட்டி கண்டு விடைபெற்றேன் . கிளம்பும் பொழுது கட்டாயப்படுத்தி அவருடன் எடுத்த போட்டவை கொடுத்தார் .போகும் வழியில் குப்பைதொட்டியில் கொட்டிவிட்டு சென்றேன். போதும் என்றளவுக்கு இந்த வேலை செய்தாயிற்று. எனக்கு வேறு வேலை வேண்டும் என்பது போல் இருந்தது . போதாக்குறைக்கு பசி அதிகமாகியது .
அங்கு விற்றுக்கொண்டிருந்த சுண்டல் பையனிடம் இருந்த சில்லறைகளை பொறுக்கி எடுத்து கொடுத்து சுண்டல் வாங்கினேன் ஐந்து ருபாய் சுண்டலை ஆடி கழிவாக மூன்று ரூபாய்க்கு கொடு என்ற போது முறைத்த சிறுவனின் முக பாவனை இப்போதும் மனதில் வந்து போகிறது .வேகமாக சாப்பிட்டால் சுண்டல் தீர்ந்துவிடுமே என்ற அச்சத்தில் மிகவும் பொறுமையாக சாப்பிட்டு கொண்டு தளர்ந்து போய் ரூமுக்கு செல்லலாம் என்று எத்தனித்து பயணத்தை தொடங்கி ஒவ்வொருத்தராக லிப்ட் கேட்டு பின் டிக்கெட் எடுக்காமல் பேருந்தில் பயணித்து என அந்த நாள் மேலும் மோசமாக ஆகும் என நான் எதிர்பார்க்கவில்லை .
ரூமை அடைந்து உடைகளை களைந்து ஆசுவாசமாக படுத்தபோது பேப்பர் குடுவையில் இருந்த இரண்டு சுண்டல்களை சாப்பிட ஆரம்பித்தேன். அந்த துண்டு பேப்பரில் உள்ள செய்தியை எத்தோசையாக படிக்க நேர்கையில் சுயதொழிலுக்காக விண்ணப்பிக்கலாம் என ஒரு முகவரி கொடுக்கப்பட்டதும் மகிழ்ச்சியாக கண்களை மூடினேன், எடிட்டரின் போன் அழைப்பை பொருட்படுத்தாமல் !!
Comments
Post a Comment