Skip to main content

பாடல்கள் பலவிதம் - Songs i love


" பாடல்கள் பலவிதம் “ 


இசை என்பது உலகின் மொழி . அத்தகைய மொழியில் குறிப்பாக தமிழ் பாடல்கள்  நம் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் அலாதியானது. அவை யாவும் மனநிலை மாற்றும் போதை வஸ்துக்கள் . நாம் பெரும்பாலும் ரசித்த , சிலர் ரசிக்க தவறிய பாடல்களின் உணர்வுகளை வெளியே எடுத்து இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.  

பாடல்கள் பலவிதம் #1

“ தென்றல் வந்து தீண்டும் போது “ - அவதாரம்


முதல் பாடல் இசைஞானியின் பாடல் . எத்தனையோ பாடல்கள் அவர் கடந்து வந்திருந்தாலும் இந்த பாடல் ஒரு பிளாட்டினம் கிரீடம் . இந்த பாடலை சிலாகிக்க, வர்ணிக்க என்னிடம் வார்த்தைகள் வறட்சி ஆகி இதயம் அந்த பாடலில் லயித்துவிட்டது . 

அது தான் “ தென்றல் வந்து தீண்டும் போது என்ன வண்ணமோ, மனசுல “ பாடல்.  
கண் பார்வை அற்ற நாயகி ,தனக்காக நாயகனும் கண்ணைக்கட்டி கொண்டு கஷ்டப்படுவதை அறிந்து , அவளுக்கு கண்ணாக இருந்து தன்னை வழிநடத்தும்படி கேட்க , அந்த ஒரு பரிவின், ஆசையின் புள்ளியில் தொடங்குகிறது பாடல். ஒரு சாதாரண இயல்பு வாழ்க்கையின் சாரம்சத்தை கொண்டு  அன்பை வெளிப்படுத்தும் விதமாக வாலியின் வரிகள் பாடலை வேறு கட்டத்திற்கு எடுத்து செல்கிறது  .

“என்னிடம் கொடுப்பதற்கு ஒன்றும் இல்லை, என் இதயத்தை தவிர. நம் இருவருக்கு மட்டுமே இந்த இயற்கை , உலகம் . எனக்கு நீ உனக்கு நான் . இடையில் நம் காதல் மட்டுமே “ என புதிதாய் இருவருக்கும் முளைத்த அந்த உணர்வு எவ்வாறு இருவர்  இடையில் நின்று ஒரு அற்புதமான வழியில் பயணிக்கிறது என்பதை காதல் தாலாட்டாக இதயத்துக்கு புத்துணர்ச்சி அளிக்கும் பாடலாக உணரவைக்கிறது !    

ஈரம்,காதல்,ஆசை,கனவு என எல்லா பரிமாணங்களிலும் நம்மை அழைத்து செல்லும் ஒரு பறவையாய் ஆரம்பிக்கிறது இளையராஜாவின் இசை . பாடலின் முதலிலே ராஜாவின் அந்த ஹம்மிங் நமக்கு அந்த இறக்கையை தந்து விரிக்க உதவுகிறது . ஜானகியின் குரலும் ஒரு தங்க இறகாய் அந்த கிரீடத்தில் அமர்ந்து மேலும் அழகாக்கிறது. மேலும் அந்த ஏற்ற இறக்கங்களுடன் இருவர் பாடும் பொழுது மனம் கிறங்கி அடிமையாகி விடுகிறது .
1995ல் வெளிவந்த “அவதாரம் “ என்னும் படத்தில் இடம்பெற்ற இந்த பாடலை பற்றி 2015லும் ரசிக்கிறோம் என்றால் அந்த எல்லாப்புகழ், இசை மாயஜாலம் நிகழ்த்திய இசைஞானியே சாரும் .

பாடல்கள் பலவிதம் #2

“அனல் மேலே பனித்துளி “ – வாரணம் ஆயிரம்



நம் வாழ்க்கையின் காட்சிகளை ஆண்டவன் நிர்ணயம் செய்யும் பொழுது, அதில் வரும் சுகம் வலிகள் மனதில் ஏற்படுத்தும் தாக்கம் பாடலாக உருவெடுத்தால் எப்படி இருக்கும் என அழகாக கவிஞர் தாமரையின் வரியில் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் மனம் கிறங்கி தன்னை செதுக்கி கொள்ள ஆயுத்தமாகும் நேரத்தை உருவாக்கும் பாடல் தான் “ அனல் மேலே பனித்துளி “.
எல்லோர் வாழ்கையிலும் காதல் , வலி , சுகம் , ஆசை என பல பரிமாணங்களில் நம்முடைய உணர்வுகளை பகிர்ந்து கொள்கிறோம் . சில நேரம் புன்னைகையாக சில நேரம் கண்ணீராக ! வாழ்க்கையில் எப்போதுமே மனதில் விளிம்பு நிலை கைதியாக இருப்பவர்களுக்கு விடியலை தேடி உழைக்க வேண்டும் உந்து சக்தியாக இந்த பாடல் இருப்பதாக நான் கருதுகிறேன்.

யாருக்கு தான் இல்லை வலி , அதை தாண்டி சிரித்துகொண்டு நாளையின் தேவைக்கான பதிலை எதிர்பார்த்து முன்னேறும் பொழுது தான் நம்பிக்கை என்னும் பிராவகம் ஊற்றெடுக்கிறது. தான் மிகவும் காதலித்த பெண்ணோ அல்லது தொழிலோ தனக்கில்லை என்னும் நிராகரிப்போ அல்லது வேறு ஒரு காரணத்தால் கிடைக்காமல் இருந்தால் இருக்கும் வலி சொல்லி புரிய வைக்க முடியாது . எல்லோரும் இந்த நிலையை கடந்து தான் வந்திருப்போம். அதை ஒரு ஆண்மையோடும் ஒரு முதிர்ந்த மனநிலையோடும் ஏற்க கூடிய பக்குவத்தை தரும் பாடல் தான் இது .

ஒரு பெண்ணுக்கு தனக்கு இது தான் வேண்டும் என்றாலும் அதை அவனிடம் சொல்ல தயங்கி ஒருக்கட்டதில் அவனுக்காக எந்த நிலை வேண்டுமானாலும் செல்வாள் என்ற தன் காதல் உணர்வை அவன் மனதில் பதிய வைக்கும் நேரம், மேலும் அவளின் காதல் அழகாய் மாறும் தருணமாய் இந்த பாடல்  வருடி காதலின் சாரம்சத்தை கொடுக்கிறது.

தான் காதலித்த ஆண் மகனின் நெஞ்சில் முகம் பதித்து , அவன் இதயத்தின் ஓசை அவள் காதில் கேட்கும் நேரம் தான் அவள் பாதுகாப்பாக உணரும் வேளை. தாயிடம் மடி சாய்ந்து உறங்கும் பொழுது இருக்கும் தாய்மையான காதல் கததப்பையும் இந்த பாடல் தருகிறது . திருமணமானவர்கள் தனக்கான துணைக்கும் குழந்தைகளுக்கும் திகட்ட திகட்ட காதலும் சந்தோஷமும் , அவர்களுக்காக தியாகமும் உழைப்பும் தரவேண்டும் என்று தூண்டுகிறது. எதற்கு மேலும் ஒரு வாழ்க்கை இருக்கிறது என மயிலரகில் வருடி இதயத்திற்கு நம்பிக்கையூட்டுகிறது.
என்ன தான் ஹாரிஸ் பாடல்களை திருடியோ அல்லது போட்ட மெட்டையே திருப்பி போடுகிறார் என்ற குற்றசாட்டு இருந்தாலும் , இந்த பாடலுக்கு அவர் உயிர் கொடுத்த விதம் , மேலும் தாமரையின் வார்த்தைகளின் வர்ணஜாலத்தால் மனதின் முன் ஒரு நம்பிக்கையும்,  இனிதான் வாழ்கையின் முதல் அத்தியாயம் என பிடிப்பை கொடுக்கிறது. தனிமையில் தன்னிடம் எதுவும் இல்லை என்ற நிலை வரும் பொழுது இந்த பாடலை கேளுங்கள் . கனத்த மனம் நிச்சயம் இலகுவாகும் .நிச்சயம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு உங்களை அது அழைத்து செல்லும் 

பாடல்கள் பலவிதம் #3


“ முன்பனியா முதல் மழையா “ –  நந்தா


மழைத்துளி மெல்ல மனதை நனைத்தது போல் சில்லென்று வீசும் முதல் காதல் தென்றலை சுவாசிக்காதவர்கள் மிகவும் குறைவு . அந்தவகையில் நந்தா படத்திலிருந்து “ முன்பனியா முதல் மழையா...” என்ற பாடல் நிச்சயம் கடவுளின் ஐப்பாடில் இருந்து திருடப்பட்ட பாட்டாகும். மனது வெடிக்கும் வரை தேக்கி வைத்திருந்த காதலை நொடிபொழுதில் சொல்ல எத்தனிக்கும் மனம், அவளை கண்டவுடன் உயிர் நனைந்து விடுகிறது. அதை அழகாக பழநி பாரதியின் வரிகள் தூரிகையால் ஓவியம் தீட்டுகிறது .

கடைசியாக உங்கள் காதலியிடம் அல்லது மனைவியிடமோ “ நீங்கள் அவர்களை  காதலிக்கிறேன் ” என்று சொல்லி இருக்குறீர்கள் ?? இந்த பாடலை இயர்போனில் மாட்டிக்கொண்டு மாடியில் படுத்துக்கொண்டு நிலாவை பார்த்து கேளுங்கள். இதுவரை இல்லாத காதல் மனதில் ஊற்றெடுக்கும் ! இந்த பாடலின் இன்னொரு சிறப்பம்சம் தலைவன் தனக்குண்டான காதலை, இதுவரை தான் கண்டிராத அவளால் நிகழ்ந்த மாற்றங்களை கூறுகிறான் . அதே நேரத்தில் தலைவியை தெம்பூட்டும் வகையில் அந்த பின்னணி இசையோடு பெண்கள் கூட்டம் அவள் தோழிகளாய் அவளை காதலை சொல்ல ஊக்கப்படுத்துவது. இது கண்டிப்பாக யுவன் சங்கர் ராஜாவின் வேறொரு பரிமாணம் என்றே சொல்லலாம். “ சோல்புல் ” பாடல் என ஆங்கிலத்தில் இருக்கும் அர்த்தத்திற்கு உதாரணம் இந்த பாடல் .

மனது இலவம்பஞ்சு போல் இலகுவாகி வாழ்க்கையை புதிய பரிமாணத்தில், காதலோடும் அன்போடும் அணுக தொடங்குகிறது . உலகில் உயிரனங்கள் படைக்கப்பட்டதே ஒன்றுகொன்று தம் மனம் மற்றும் உடல் தேவைகளை பூர்த்தி செய்ய . அந்த வகையில் “ காதல் “ என்ற காமம் கலக்காத இரு உணர்வுகள் மீட்டும் மெல்லிய இசை தான் இந்த பாடல் . எஸ்.பி. சரனின் யின் மயக்கும் குரலில் அந்த பாடல் உங்கள் செவி வழியில் பாயும் பொழுது , நிச்சயம் உங்கள் மனதில் சொர்கத்தின் வாசல் திறக்கும் .
ஒரு பெண்ணின் பார்வையிலிருந்து தன் காதலை எங்கே அந்த ஆண்மை ஏற்றுக்கொள்ளாதோ என்ற தயக்கம் தெளித்து , அதே சமயம் இன்னவன் தான் என்னவன் என அவன் புரிந்துகொள்ள மாட்டனா ஒரு சின்ன ஏக்கம் அந்த போலி புன்னகையின் ஓரத்தில் எட்டி பார்க்கிறது. வாழ்கையில் காதலை உணரவேண்டுமென்றால் ஒரு முறையாவது இந்த பாடலை அனுபவித்திருந்தால் போதும் , ஆயுளுக்கும் சுகம் !    
இறக்கை விரித்து வானத்தில் வட்டம் போட எட்டி குதிக்க நினைக்கும் சுட்டி இதயம் அவளை கண்டவுடன் மெதுவாக  பார்வையால் கடந்து விட தோன்றும் பிரதிபலிப்பை அழகாக பாடல் வெளிப்படுத்துகிறது. ஒரு மழைநேரத்தில் காலியான பேருந்தில் நாம் உட்கார்ந்து இருக்கும் பொழுதில் மழையில் நனைந்த படி உங்கள் எதிரில் உங்களுடன் பள்ளியில் படித்த நீண்ட நாள் உயிர்தோழி தென்படும் பொழுது ஏற்படும் உணர்வின் தாக்கமாய் மனதில் நிச்சயம் இந்த பாடல் ஓடிக்கொண்டிருக்க வேண்டும்.

சில சமயம் காதலை தொல்லை செய்யாமல் தூரத்தில் இருந்து ரசித்தாலே அதன் சுகத்தில் இதயம் கரைந்து விடும் !

Comments

Popular posts from this blog

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் -1

அன்று மாலை எமிக்கு எதுவுமே சரியாய் நடப்பதாய் தெரியவில்லை.சிறிது நேரம் யோசித்தவள் தலை வலிக்கவே  யோசிப்பதை நிறுத்திவிட்டு கல்லூரியிலிருந்து வீட்டிற்கு கிளம்பி சென்று கொண்டிருந்தாள் . “ மேடம் இந்த புக்கு ரொம்ப நல்லா இருக்கும் ... வாங்கி படிங்க எல்லாருடைய விருப்பத்துக்கு ஏத்தா மாதிரியும் இங்க கம்மி விலையில் புத்தகம் கிடைக்கும் “ என எமியை மட்டுமே ஒருவாறு உற்று நோக்கி கொண்டே தன் வியாபாரத்தை கவனித்து கொண்டிருந்தான் அந்த வியாபாரி கிழவன். அந்த கிழவனை கடந்து சென்றவள் , ஒரு நிமிடம் நின்று அவனை திரும்பி பார்த்தாள். அவன் கண்கள் அவளை " வா வா "  என்றது . அவளும் அவனிடம் வசியப்பட்டது போல அவனிடம் ஈர்க்கப்பட்டு அவனருகே சென்றாள் . வானிலை கருப்பு மேகங்களாய் மாற , மற்ற பறவைகள் எல்லா இடத்திலும் பறந்து செல்லும் போது அங்கே வித்தியாசமாய் கூட்டமான அண்டங்காக்கைகள் வட்டமிட்டு அமர்ந்து கொண்டு எமியை உற்று நோக்கி சூழ்நிலையை மோசமாக போவதை உணர்த்தியது. “ வா எமி ...” “ என் பெயர் அவனுக்கெப்படி தெரியும் ?? ” என அதிர்ந்தாள் . “ எனக்கு எல்லாம் தெரியும் எமி ...! “ என சிரித்தான் அந்த நரைத்...

கண்ணாடி நிழல்கள் - அத்தியாயம் - 4

மெல்ல மார்க்கை நோக்கி நடந்து வந்த லீமர் வான்ட் , தன் சாத்தான் படைகளை கை காட்டி சைகையில் நிறுத்தினான் . இருவருக்கும் பயத்தில் இதய துடிப்பு உசேன் போல்டுடன் போட்டி போட்டு கொண்டு ஓடியது . லீமர் வான்ட் மெதுவாக தன் கைகளை மார்க்கின் கழுத்தின் மீது வைத்து அவனை தூக்க ஆரம்பித்த போது  மார்க் அலறினான் !! “ என்ன விட்டுடு ....” லீமர் . “ ஆமா ... அவன விடு “ என கதறினாள் எமி. “ ஹாஹஹாஹாஹா..... “ என லீமர் சிரித்த போது அங்கே  அந்த மின்னல் வெளிச்சத்தில் அவன் கொடூரமாய் தெரிந்தான் . “ விட்டுடறேன்..... ஆனா நீ எனக்கு வேணும் எமி ...” என மீண்டும் வில்லத்தனமாக சிரித்தான் லீமர். அவனின் இறுக்கமான பிடியிலும் அந்த மழையிலும் மார்க்கால் வாயை திறக்க முடியவில்லை . “ சரி ... அவன விட்டுடு ... என்ன எடுத்துக்கோ ...” “ தட்ஸ் மை கேர்ள் ....கம் டு பாப்பா “ என மறு கையால் எமியை கழுத்தோடு தொட்டு தூக்கினான் லீமர் . அப்படி தூக்கும் பொழுது லீமரின் நகம் பட்டு எமிக்கு லேசாக கீறி ரத்தம் வழிந்து கொண்டிருந்தது .  இருவரையும் ஒரே மூச்சில் தின்றுவிட தன் நீண்ட நாக்கை தொங்க போட்டு எமியை நெருங்க ...